சரத் பொன்சேகா கைது: பல்வேறு நாடுகளிலும் கண்டனம்!
இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சேம் சாராபி இது தொடர்பில் கருத்துரைக்கையில், சரத் பொன்சேகாவின் கைது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தேர்தல் வெற்றியின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும் நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பேணவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.





